பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: கோடை விடுமுறை தொடங்குகிறது
பள்ளி முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுவதை அடுத்து,
மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை (ஏப்.17) முதல் தொடங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்
தேர்வு கடந்த மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல் 1
முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல்
1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே
தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத்
தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 16) நிறைவுபெறுகின்றன. நிறைவு நாளில் சமூக
அறிவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: தொடர்ந்து இவர்களுக்கான கோடை விடுமுறை நாளை
(ஏப்ரல் 17) முதல் தொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி
வேலைநாளான ஏப்ரல் 25-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு
மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டும். கோடை
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
