6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று
பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில்
‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திறன் இயக்கம்
பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். திறன் இயக்க மாணவர்கள்
தனியாக அமர வைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க
வேண்டும்.
அந்த வகையில் மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில்
மாணவர்களைச் சேர்த்து பயிற்சி தரவேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிடம்
வீதம் 30 நாட்கள் பயிற்றுவிக்க வேண்டும்.
இதுதவிர வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, அந்த வாரத்தில் நடத்தப்பட்ட
பாடங்களில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு தேர்வுகளை நடத்த வேண்டும். ஒரு
பாடத்தலைப்பு முடிந்த பின்பு அதற்கான பயிற்சித்தாள் செய்வதையும் தலைமை
ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்
பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும். மேலும், இதுசார்ந்த
வழிமுறைகளை பின்பற்றி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.