தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி வசூலித்த விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 100 கோடிக்கு மேல்
வசூலித்ததாக தனக்கு எதிராக பதியப்பட்டு்ள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனு உயர்
நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகியுள்ள பி.டி. அரசகுமார் மீதான குண்டர்
தடுப்புச்சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ
அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக்கூறி திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமார்
உள்ளிட்டோர் ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்துள்ளதாக பள்ளி
நிர்வாகிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் திமுக முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ் மற்றும் திமுக
நிர்வாகியும், தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்
சங்கத் தலைவரான பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார்,
சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் கடந்த
செப்.16 அன்று அன்பில் மகேஸின் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது
உறவினர்களின் வீடுகள் உள்பட 9 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை
பறிமுதல் செய்தனர்.
அதன்பேரில் போலீஸார் கடந்த செப்.18 அன்று அன்பில் மகேஸிடம் விசாரணை
நடத்தினர். இந்நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ்
பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன்,
வழக்கின் எப்ஐஆர் நகல் கிடைக்கப்பெறவில்லை என்பதால், அந்த நகல் இல்லாமல்
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனக்கோரினார்.
அதையேற்ற நீதிபதி, இந்த மனு மீதான நடைமுறைகளை முடித்து, செப்.30 (நாளை)
விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவு ரத்து
ரூ.100 கோடிக்கு மேல் பண வசூலில் ஈடுபட்டதாக கைதான பி.டி. அரசகுமாரை குண்டர்
தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூலை
11 அன்று உத்தரவிட்டார்.
தனது கணவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி
அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே. ராஜ சேகர்
ஆகியோர் அடங்கிய அமர்வு, பி.டி.அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச்சட்ட
உத்தரவை ரத்து செய்து உத்தரவி்ட்டுள்ளது.
