அரையாண்டு தேர்வில் இரட்டை வினாத்தாள் பள்ளிக் கல்வி தனி ரூட்

அரையாண்டு தேர்வில் இரட்டை வினாத்தாள் பள்ளிக் கல்வி தனி ரூட்

தமிழகத்தில் நடக்கும் அரையாண்டு தேர்வில் தொடக்க கல்விக்கு உட்பட்ட 6-8 ம் வகுப்புக்கும், பள்ளி கல்விக்கு உட்பட்ட 6,- 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனி வினாத்தாள் வழங்கப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது.

மாநில அளவில் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்த பொது வினாத்தாளை பின்பற்ற கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்படு இருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் முடிவால் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலித்து மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.


ஆனால், தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட நடுநிலை பள்ளிகள் (6 முதல் 8 ம் வகுப்பு) உட்பட அனைத்து வகுப்புகளிலும் மாநில வினாத்தாள் வழங்கப்படுகிறது.


அதேநேரம், உயர் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 6, - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட வினாத்தாள் வழங்கப்படுகிறது. ஒரே வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்குவதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:


பள்ளி கல்வி, தொடக்க கல்விக்கு தனித்தனி இயக்குநர் உள்ளனர். அவர்கள் உத்தரவுப்படி தேர்வு நடந்தாலும் ஒரே பாடத் திட்டங்களை பயிலும் மாணவர்களுக்கு இருவேறு வினாத்தாள் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இரண்டு வினாத்தாள் முறையால் மாநில அளவில் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறனை எவ்வாறு மதிப்பிட முடியும்.


சிவகங்கையில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாவட்ட வினாத்தாளில் கணித தேர்வில் வினாவிற்கு உரிய படமின்றி கேட்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதை தவிர்க்க இனிமேலாவது ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்த கல்வித்துறை 'கறார்' உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.