தொழிற்கல்வி பாடம் ரத்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

தொழிற்கல்வி பாடம் ரத்து: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.


தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டில் (2022-2023) 9, 10 தொழிற்கல்வி பாடம் கிடையாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தொழிற்கல்வி பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் அறிமுகமான தொழிற்கல்வி பாடத்திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

மேலும் அழகுக்கலை, தையல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகள், மாவட்டத்துக்கு இரண்டு முதல் மூன்று அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக ஆசிரியா்களுக்கான ஊதியம், மத்திய அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டு (2022 - 2023) முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டம் இடம் பெறாது எனவும், வழக்கம்போல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் இடம்பெறும் என்றும் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

வரும் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஊதியம் கொடுக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கவில்லை. இதன் காரணமாக 200-க்கும் அதிகமான தொழிற்கல்வி ஆசிரியா் பயிற்றுநா்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.